பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடன் பெற்றுவிட்டு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை விட்டு தப்பியோடினர்.
கடன் மோசடி தொடர்பாக நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத் துறை, தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இந்நிலையில், "தி டெலிகிராப்" எனும் சர்வதேச நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக திரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அவருடன் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அதற்கு அவர் "மன்னிக்கவும் என்னால் பதில் செல்ல முடியாது " என்று தொடர்ந்து கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மத்திய அரசு நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டது.
அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு எதிராக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த 19 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீரவ் மோடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி எம்மா அர்புதோட், நிரவ் மோடியின் பிணை மனுவை நிராகரித்ததோடு, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நிரவ் மோடியை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.