எம்.ஹெச் 17 விமானம் மாயமான விவகாரம்: 4 பேர் மீது வழக்கு - கூட்டு விசாரணைக் குழு
ஆம்ஸ்டர்டாம்: மலேசியா விமானமான எம்.ஹெச் 17 விமானம் மாயமானது தொடர்பாக, சர்வதேச விசாரணையாளர்கள் ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
2014 ஜூலை 17ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த எம்.ஹெச் 17 என்னும் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிப் பயணித்து.
விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில், அதன் தொடர்பை இழந்தது. இதனிடையே, உக்ரைன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் மீது திடீரென எங்கிருந்தோ வந்த ஏவுகணை தாக்கியது. இதில், விமானம் நடுவானிலேயே சுக்குநூறானது. விமானக் குழுவினர், பயணிகள் என 298 பேர் பரிதாபமாகப் பலியாகினர் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்த இந்த சம்பவம் குறித்து மலேசியா, நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கூட்டு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதனையடுத்து, எம்.ஹெச் 17 விமானத்தைத் தாக்கிய ஏவுகணை ரஷ்ய ராணுவப் படையைச் சேர்ந்தது என்று விசாரணை அதிகாரிகள் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர். விமானம் மாயமானபோது உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யா ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி, ஒலெக் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்ற ஒரு உக்ரைன் நாட்டவர் என நான்கு பேர் மீது, கூட்டு விசாரணைக் குழு தற்போது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீதான வழக்கு விசாரணை, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அவர்கள் கூறினார்.