ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்தையடுத்து, 2016ஆம் ஆண்டு பிரதமர் தெரசா மே முயற்சியால் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவு கிடைக்கப் பெற்றதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தம் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை பிற உறுப்பு நாடுகள் அனுமதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட எட்டு விதமான நடைமுறைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
அடுத்தகட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒரு சில எம்.பி.க்கள் கூறினாலும் அதற்கு மற்றொரு தரப்பு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல 12 அல்லது மே 22 வரை நீட்டிக்க கோரிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 441 எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தோல்வியை சந்தித்தது. இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்திவரும் தெரசா மே, பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் மற்றொரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், நான்காவது முறை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.