சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கோவிட்-19 தொற்று தற்போது உலகிலுள்ள 185-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி திகழ்கிறது.
அங்கு இதுவரை 1,72,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 22,745 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இத்தாலியில் நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கைத் தளர்த்த தேவையான நடவடிக்கைகளை இத்தாலி அரசு தொடங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதுமுள்ள சுமார் 1,50,000 மக்களின் எதிர்ப்புச் சக்தி குறித்து முதல்கட்டமாகச் சோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பெருந்தொற்றுக்கான இத்தாலி ஆணையர் டொமினிகோ அர்குரி கூறுகையில், "இந்தச் சோதனைகளை நாங்கள் படிப்படியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்தச் சோதனை நடத்தப்படும்" என்றார்.
அந்நாட்டிலுள்ள பல்வேறு மாகாணங்களும் தனியார் நிறுவனங்களும்கூட நோய் எதிர்ப்பு சோதனைகளைத் தொடங்கியுள்ளன. ஆனால், தற்போது நிலவும் நெருக்கடியை கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த சோதனை முறையையே அரசு விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "வைரஸ் பரவல் குறித்த தரவுகளைப் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரைவில் இதற்கென்று ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட மாகாணத்தில் பரிசோதனை செய்துபார்க்கப்படும். பின் நாடு முழுவதும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பரிசோதனை மையத்திலிருந்து வெளியேறியது கரோனா? ட்ரம்ப் விசாரணை