சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எனினும், ஹவுதிகளின் கூற்றை ஏற்க மறுத்த அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் சவுதி எண்ணெய் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில், சவுதி எண்ணெய் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாகப் பிரிட்டன் அரசு தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சவுதி எண்ணெய் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என நாங்கள் கருதுகிறோம். வளைகுடாவில் நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் பேசிவருகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஐநா பொதுக்கூட்டத்தின்போது, சவுதி தாக்குதல் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியிடம் தான் ஆலோசிக்கவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.