2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று (அக்.4) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
புவியின் தட்பவெட்பம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்விற்காகவும், மிகவும் சிக்கலான இயற்பியல் தன்மைகள் குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மொத்தப் பரிசுத் தொகையான சுமார் 8.22 கோடி ரூபாயில் பாதித்தொகையை இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி பெறுகிறார். மீதமுள்ள தொகை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெயின்ஹார்ட் கென்சல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கேஸ் (அமெரிக்கா) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வேதியலுக்கான நோபல் பரிசு நாளை(அக்.6) அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: 2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இருவர்