காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்களை குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி தகர்த்தது. இந்த சம்பவத்தையடுத்து இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவானது.
இதனையடுத்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து முயற்சி வரும் நிலையில், இந்த முடிவுக்கு சீனா ஆதரவு அளிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங், " தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்திவைப்பதை சுட்டிக்காட்டி, பயங்கரவாதத்திற்கு சீனா அடைக்கலம் தருகிறது என குற்றஞ்சாட்டுவது சரியா? அப்படி என்றால், தொழில்நுட்ப காரணங்களை அதிகளவில் வைத்திருக்கும் நாடுகள் பயங்கரவாதத்தின் மிகப்பெரிய பாதுகாவலர்களா?" என சரமாரி கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர், " அனைத்து நாடுகளுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. இதனை நோக்கியே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளும் நகர வேண்டும்" என தெரிவித்தார்.