கடந்த 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இதுவரை உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.14 கோடியைக் கடந்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.64 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்த கோவிட் - 19 வைரஸ் உருமாற்றம் அடைந்து, பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அவை, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், பிரிட்டன் வைரஸ், தென்னாப்பிரிக்கா வைரஸ், வியட்நாம் வைரஸ் என அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா வகைகளை, இந்திய வகை கரோனா என அழைப்பதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, புதிய பெயர்களை கரோனா வகைகளுக்கு வைத்திட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது.
கரோனாவுக்கு புதிய பெயர்:
அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 வேரியண்ட்-க்கு ‘டெல்டா’ (Delta) என்றும், B.1.617.1 வேரியண்ட்-க்கு ‘கப்பா’ (Kappa) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கரோனா வகைக்கு ஆல்பா என்றும், தென் ஆப்பிரிக்கா வகைக்கு பீட்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களை வைக்க எதிர்ப்பு கிளம்பியதால், உலக சுகாதார அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.