உலகளவில் பிரபலமான டிக்டாக் செயலிக்கு, சமீப காலங்களாக பல எதிர்ப்புகள் வந்தன. முதலாவதாக, இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் தகவல்கள் டிக்-டாக்கில் இடம்பெறுவதாக கூறி இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இதனால், பல ஆயிரம் கோடி நஷ்டத்தை பைட்டானஸ் நிறுவனம் சந்தித்துள்ளது. இதே போல், டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவாலும் டிக்டாக் நிறுவனம் செய்வதறியாமல் திகைத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின நட்பு நாடான பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறுகையில், ''வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலியான டிக்டாக் மீது சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடம் இருந்து புகார் வந்தது.
வீடியோக்களில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தனர்.
பாகிஸ்தான் அரசின் தடைக்கு பதிலளித்துள்ள பைட்டான்ஸ் நிறுவனம், "பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளோம். வரும் காலத்தில் பாகிஸ்தான் அரசு எங்களின் டிக்டாக் செயலிக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அரசின் சந்தை விதிமுறைகளுக்கு ஏற்றப்படி மாற்றியமைப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.