இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரித்த நாடாளுமன்ற விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், "தாக்குதலுக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே இது குறித்த தகவல்கள் உளவுத் துறைத் தலைவர் நிலந்தா ஜெயவர்தனவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை மற்ற உளவுத் துறை முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஏற்பட்ட கால தாமதமே இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணமாக அமைந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே, ஈஸ்டர் திருநாளைக் குறிவைத்து ஜார்டான் ஹாசிம் தலைமையிலான குழு நாடு முழுக்க தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் நிலந்தாவுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி அறிக்கை கேட்ட பாதுகாப்புத் துறைச் செயலருக்கு நிலந்தா முறையான தகவல்களை அளிக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குண்டுவெடிப்பு குறித்து தனக்குக் கிடைத்த தகவல்களை நிலந்த ஜெயவர்தன ஏப்ரல் 19ஆம் தேதிவரை ராணுவத்திடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாள் அன்று தொடர் குண்டுவெடிப்பில் பிரிட்டனைச் சேர்ந்த எட்டு பேர் உள்பட 269 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர குண்டுவெடிப்பை ஜார்டான் ஹாசிம் என்பவர் தலைமையில் இயங்கிவந்த பயங்கரவாதிகள் குழு அரங்கேற்றியது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய பிரதமரின் தீபாவளி வாழ்த்து!