கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மியான்மரில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு புரட்சி வெடித்தது. எனினும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் அறவழியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களை ஒடுக்கும்விதமாக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
முன்னதாக மார்ச் 16ஆம் தேதி அன்று ”கடந்த 43 நாள்களில், மியான்மரில் அமைதியாகப் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என ஐநா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராணுவ அடக்குமுறையால் முன்னதாக உயிரிழந்த மாணவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் நேற்று முன் தினம் (மார்ச்.27) கலந்துகொண்ட நபர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குறைந்தபட்சம் 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கொல்லப்பட்டவர்களுள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
முன்னதாக கொல்லப்பட்ட மாணவர் அந்நாட்டின் பாகே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அம்மாணவர் ஜனநாயக சார்பு இயக்கங்களுக்கு ஆதரவளித்தும், அனைத்து பர்மா மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துவந்த நிலையில், அந்நாட்டு ராணுவம் மாணவரை சுட்டு வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து இத்தகைய வன்முறையையும் நிகழ்த்தியுள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மேலும் சில நபர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், நேற்றும் இந்த அடக்குமுறை தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சில இறுதிச் சடங்குகளில் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிராக மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
அந்நாட்டின் பாமோ, யாங்கோன் உள்ளிட்ட பகுதிகளில் அறவழியில் போராடிய மக்கள், எதிர்ப்பின் அடையாளமான மூன்று விரல் சல்யூட்கள் செய்து, ராணுவத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், குழந்தைகள் உள்பட இத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மியான்மரில் சிறைவைக்கப்பட்ட ஜனநாயகம்!