மியான்மரில் 2017ஆம் ஆண்டு ரோஹிங்கிய இன மக்களுக்கு எதிராக அரசுப்படை தாக்குதல் நடத்தியது. மேலும் இது தொடர்பான ஆவணங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வா லோன், கியா சியோ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் முறைகேடாகப் பெற்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இரண்டு பேருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யாங்கூன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் தரப்பில் செய்த மேல்முறையீடு மனு ரத்து செய்யப்பட்டதோடு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவின் புகழ்பெற்ற புலிட்சர் விருது இந்த இரண்டு பத்திகையாளர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் வின் மியிண்ட் புத்தாண்டை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, அந்தப் பட்டியலில் வா லோன், கியா சியோ ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அவர்கள் இருவரும் 511 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று காலை சிறையிலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.