இந்தோனேஷியாவின் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுதவிர அந்நாட்டின் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.
மூன்று தேர்தல்களிலும் சேர்த்து மொத்தமுள்ள 20 ஆயிரம் இடத்திற்கான போட்டியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான பணியில் நாடு முழுவதிலும் உள்ள எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் 60 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பிரம்மாண்ட தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தல் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக, நோயால் பாதிக்கப்பட்டு 270க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பல தற்காலிக பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும், அவர்கள் அதிகபடியான வாக்குச்சீட்டுகளை கைகளால் எண்ணும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக ஆயிரத்து 878 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் இந்தோனேஷியா அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் மே 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தி அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.