ஈரானின் தெற்கு கடல் பகுதிகளில் உள்ள அமெரிக்கா கப்பல்களை அச்சுறுத்தும் ஈரானிய படகுகளை சுட்டுத் தள்ளுமாறு அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் உத்தரவுக்கு முன்னதாக, ஏப்ரல் 15ஆம் அன்று, வளைகுடாவில் உள்ள சர்வதேச கடலில், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கடலோரக் காவல்படை கப்பல்களுக்கு அருகில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் 11 ராணுவக் கப்பல்கள் "ஆபத்தான நடவடிக்கைகளை" மேற்கொண்டதாக அமெரிக்க கடற்படை குற்றஞ்சாட்டியிருந்தது.
ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவின் தொழில்சார்ந்த அபாயகரமான நடவடிக்கைதான், ஈரானிய படைகள் அமெரிக்க கப்பல்களுடன் மோதலுக்குக் காரணமாக அமைந்தது என்று கூறினார்.
மேலும், தங்கள் தேசிய பாதுகாப்பு, கடல் எல்லைகள், கடல்சார் நலன்கள், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்கிறோம் என்றும் தங்கள் பகுதியில் நிகழக்கூடிய எந்தவொரு தவறான நடவடிக்கைக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
இது குறித்து பேசியுள்ள அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் ஹடாமி, "ஈரானிய ஆயுதப்படைகள் நாட்டிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க தயாராக இருக்கிறது. ஆயுதப்படைகள் உலகளாவிய பிராந்திய முன்னேற்றங்களை விழிப்புடன் கண்காணித்துவருவதாக அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் எந்தவித அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளது, சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் தனது பிரதேசத்தைப் பாதுகாக்கத் தயங்காது" என்று கூறியுள்ளார்.
மேலும், கரோனா அச்சுறுத்தலை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் கவனம்செலுத்திவரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ஏழாயிரம் மைல் தொலைவில் உள்ள வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளைகுடா, மேற்கு ஆசியாவிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற ஐஆர்ஜிசி கோரிக்கைவைத்துள்ளது. இப்பகுதியில் அமெரிக்கப் படைகள் சட்டவிரோதமாக இருப்பது மேற்கு ஆசியாவில் பாதுகாப்பின்மைக்கு ஆதாரமாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையும் பார்க்க: கிம் உடல்நிலை குறித்த வதந்திகள் போலியானவை - ட்ரம்ப் தகவல்