சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் 43 வயதான பிரீதம் சிங் (இந்திய வம்சாவளி), தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆவார். இவரது கட்சி நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 93 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களை வென்றது. மீதமுள்ள 83 இடங்களையும் மக்கள் செயல் கட்சி கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக மாறியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் லீ செய்ன் லூங்கின் கட்சி உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதற்கிடையில், நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ”சிங்கப்பூரில் இதுவரை இதுவரை முறையான எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நடைபெறவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்புகளைப் போலவே, அரசின் கொள்கைகள், மசோதாக்கள், இயக்கங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களில் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதில் சிங் எதிர்க்கட்சியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கிறோம். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஏனென்றால், சிங்கப்பூரின் அரசியலமைப்பு வழிகாட்டுதல்களில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்து எதுவும் இல்லை. இதனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, எதிர்க்கட்சிப் பதவி உருவாக்கப்பட்டது. அந்தப் பதவிக்குத்தான் தற்போது பிரீதம் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கு தலைமை தாங்குதல், ஒழுங்குபடுத்துதல், பொதுக் கணக்குக் குழு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக சிங் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.