இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியதையடுத்து பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், ”சுலவேசி தீவின் மையப்பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தீவில் உள்ள பலு மற்றும் டங்கலா நகரங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும்சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 2004 ஆம் ஆண்டு சுமித்ரா தீவுப் பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 9.1 பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு பல லட்சம் மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.