ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்கள், காவல் துறையினர் மீது குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது.
அந்த வகையில், கோஸ்ட் பகுதியில் உள்ள காவல் துறை சிறப்புப் படைத் தளத்திற்கு அருகே வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை முதலில் தாலிபான் அமைப்பினர் வெடிக்கச் செய்தனர். இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்களுடன், தாலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென தாலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீண்டும் வெடிகுண்டுகள் அடங்கிய வாகனத்தைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அருகில் வெடிக்கச் செய்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.