ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலிபான், ஐஎஸ்ஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பல தாக்குதல்களுக்கு காரணமாக உள்ளன. இந்நிலையில், தலைநகர் காபூலுக்கு அருகே உள்ள பாராகி நகரில் அந்நாட்டு ஹர்ஜ், மத விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் பயணித்த சிறிய பேருந்து வெடித்தது.
உள்ளூர் நேரப்படி காலை 7.45 மணிக்கு நடைபெற்ற இந்த வெடிவிபத்தில் ஊழியர்கள் 10 பேர் பலத்த காயமடைந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் நிறைந்திருந்த பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே, காபூலின் கார்ட்-இ-சகி பகுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பலியாகினர்.