கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்நோய் தற்போது இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
வணிகர்கள், சுகாதார அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் அமெரிக்க செனட் சபை 2.2 டிரில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததால் பலர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர்.
1.5 பில்லியன் மக்கள் மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால் உலகம் முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் தங்களின் பொன்னான நேரத்தை உலக தலைவர்கள் வீணடித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், "இரண்டு மாதத்திற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், முதல் வாய்ப்பை தவற விட்டுள்ளோம். இது இரண்டாவது வாய்ப்பு. இதனை தவற விடாமல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று : 8 தமிழர்களை கொன்ற சிங்கள ராணுவ சிப்பாயை விடுதலை செய்த இலங்கை அரசு!