கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 36,64,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று காரணமாக 2,57,302 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவிட்-19 தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட வீடியோவில், "சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் எந்தளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தால் தெரியவருகிறது.
அதிக அளவு வன்முறை, அச்சுறுத்தலுக்கு உண்டான மாற்றுத்திறனாளிகள் வறுமையில் வாழ்ந்துவருகின்றனர். இந்த பெருந்தொற்று அவர்களிடையே நிலவும் சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. கரோனா வைரஸ் நோயால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் உடல்நிலை மேலும் மோசமடையும். உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும்.
ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் 19 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இளம் வயதினருக்கு முன்னுரிமை வழங்கி பாகுபாட்டுடன் சில நாடுகளில் மருத்துவ சேவை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர நாம் அனுமதிக்கக்கூடாது. பெருந்தொற்று காலத்தில் மற்றவர்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவ சேவை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை