.அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், முதல் வேலையாக அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடும் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்தார். அதற்காக, கரோனா டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா மருத்துவர் விவேக் மூர்த்தி, இந்த குழுவின் இணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்ற உயர் பதவியில் இருந்தார். ஆனால், டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலே அப்பதவியில் இருந்து விவேக் நீக்கப்பட்டார். நடந்து முடிந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராகவும் விவேக் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பைடனின் குழுவில் இடம்பிடித்த மற்றொரு இந்திய வம்சாவளி அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் கவாண்டே. மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட இவர், கிளின்டன் நிர்வாகத்தில் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். இவரும் தற்போதைய அதிபர் ட்ரம்பால் நீக்கப்பட்டவர் ஆவார். இவர்களைப்போல், ட்ரம்ப் நீக்கிய பலரும் பைடனின் டாஸ்க் ஃபோர்ஸ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த சில நாள்களாக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.