அமெரிக்காவின் தென்-கிழக்கு கரையோர மாகாணமான புளோரிடாவில் பென்சகோலா நேவல் ஏர் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி) துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் மூன்று கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவர் சவுதி விமானப் படையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மாகாண ஆளுநர், "துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ராணுவ பயிற்சிக்கு அமெரிக்கா வந்திருந்த சவுதி விமானப் படையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்" என்றார்.
விமான தளத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்ததாக, எஸ்காம்பியா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காட்டுமிராண்டித்தனம்’ - ட்ரம்ப் கொந்தளிப்பு
சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘துப்பாகிக்சூட்டில் இறந்த, காயமடைந்த வீரர்கள் குறித்து சவுதி அரேபிய மன்னர் சல்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். குற்றவாளியின் காட்டுமிராண்டித்தனமான செயல் சவுதி அரேபியா மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பென்சகோலா நேவல் ஏர் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளது.