கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகெங்கும் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தும், மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தும் 95 விழுக்காடு பலனளிப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்ட முடிவுகளின் அடிப்படையில் தடுப்பு மருந்திற்கு அவசர ஒப்புதல் தர வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஃபைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஃபைஸர் நிறுவனத்தின் விண்ணப்பம் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு ஒப்புதல் வழங்கப்படும்பட்சத்தில் டிசம்பர் மாதமே ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பொதுமக்கள் மீது பயன்படுத்தப்படும். டிசம்பர் மாதம் 2.5 கோடி தடுப்பு மருந்துகளும், ஜனவரி மாதம் 3.5 கோடி தடுப்பு மருந்துகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
தடுப்பு மருந்தை உற்பத்திசெய்வது என்பது சாதாரண மருந்தை உற்பத்தி செய்வதைவிட சிக்கலானது. எனவே, தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகளை மட்டுமின்றி, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் ஆராய்ந்தே தடுப்பு மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும்.
அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் ஃபைஸர் நிறுவனம் அவசர ஒப்புதல் வேண்டி விரைவில் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் பயன்படுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை