இந்தியாவில் கரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே குறைந்துவருகிறது. இருப்பினும், இதற்கு நேர்மாறாக தேசிய தலைநகர் பகுதியில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக தேசிய தலைநகர் பகுதியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் பரவியது. ஆனால், இதற்கு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யேந்தர் ஜெயின், "டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள சூழ்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உதவும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு பதில் அனைவரும் முகக்கவசங்களை அணிந்தாலே வைரஸ் பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
டெல்லியில் கோவிட்-19இன் மூன்றாவது அலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுவிட்டது. தற்போது கரோனா பரவல் மெள்ள குறைந்துவருகிறது" என்றார்.
மாநிலத்தில் ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "மாநிலத்தில் ஐசியூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை உள்ளது உண்மைதான். இது குறித்து நேற்று (நவ. 15) முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் இருக்கும் மத்திய அரசின் மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகளை அதிகரிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்விடுத்தார். 750 படுக்கைகள் வரை மத்திய அரசின் மருத்துவமனைகளில் அதிகரிப்பதாக உள் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
மேலும், பொதுஇடங்களில் முகக்கவசங்களை அணியாமல் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், கடந்த சில நாள்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து சுமார் 45 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: மூக்கில் செலுத்தக்கூடிய கரோனா தடுப்புமருந்து - பாரத் பயோடெக் இயக்குநர் தகவல்