பராமரிப்புப் பணிகள்,புதிய கட்டுமானப்பணி ஆகியவற்றுக்கு விண்வெளி வீரர்கள் சில மணி நேரம் விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வார்கள். ஆனால், இந்தப் பணிகளில் ஒருமுறை கூட பெண்கள் மட்டுமே இணைந்து வெளியே சென்றது கிடையாது. இரண்டு ஆண்கள் அல்லது ஒரு ஆண், ஒரு பெண் விண்வெளி வீரர்கள் மட்டுமே இணைந்து வெளியே செல்வது வழக்கம். இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில் இந்த மாதம் 29ஆம் தேதி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்ளப்போகிறார்கள் எனத் தெரிவித்திருந்தது. அதற்காக கிறிஸ்டினா கோச் (Christina Koch), அன்னி மெக்ளைன்(Anne McClain) ஆகிய இரண்டு விண்வெளி வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், அன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் மாற்றம் செய்யப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி உடை பற்றாக்குறையாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் விண்வெளி நடை மேற்கொண்ட அன்னி மெக்ளைனுக்கு நடுத்தர அளவிலான விண்வெளி உடை பொருத்தமானதாக இருந்திருக்கிறது. ஆனால், வரும் வெள்ளியன்று ஒரே ஒரு உடை மட்டுமே தயாராக இருப்பதால் அவர் நடையை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, இம்மாதம் 29ஆம் தேதி கிறிஸ்டினா கோச் என்ற பெண் விண்வெளி வீராங்கனையும் நிக் ஹேக் (Nick Hague) என்ற ஆண் வீரரும் வெளியே சென்று ஆய்வு வேலைகளை மேற்கொள்ளவுள்ளனர்.