சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட கோவிட்-19 தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வைரஸ் பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தாலும், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை அனைத்து மாகாணங்களும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் அழுத்தும் கொடுத்துவருவதாகவும் தகவல் வெளியானது. இது வைரஸ் பரவலின் வேகத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் முக்கிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் கோவிட்-19 தொற்று காரணமாக ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அந்நகரில் 59 பேர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நகரில் ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதுவரை 20,976 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நகரில் வைரஸ் தொற்று இரட்டிப்பாக 15.5 நாள்கள் ஆகிறது என்றும் அந்நகரின் மேயர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் டாக்ஸி டிரைவர்கள், கட்டடத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லையென்றாலும் வைரஸ் சோதனையில் தங்களை உட்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்குப் பிரிட்டனில் ஒரு நிமிடம் அஞ்சலி