15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சபையில் பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்த 10 இடங்களில் ஐந்து இடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது வழக்கம்.
இந்தாண்டு தேர்தல் அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடந்தது. கரோனா நெருக்கடி காரணமாக 193 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுந்த இடைவெளியுடன் வாக்குப்பதிவு நடந்தது. இதில் வெற்றி பெற 2/3 பெரும்பான்மை வேண்டும். அதாவது 128 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு அளித்தன. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில் 184 உறுப்பினர்களின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் இந்தியா இன்று ஏகமனதான வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக (நிரந்தரமல்லாத) உறுப்பினரானது. இந்தத் தேர்தலில் கனடா தோல்வியடைந்தது.
இந்த அமைப்பில் நிரந்தரமல்லாத 10 இடங்களில் ஆசியா- ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள ஐந்து இடங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒன்றும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளுக்கு இரண்டும், மீதமுள்ள இரண்டு இடங்கள் மேற்கு ஐரோப்பியா மற்றும் இதர நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன.
இதையும் படிங்க: 'எல்லை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?' - பிரியங்கா காந்தி