ஜெனிவா: உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 10 வாரங்களில் 9 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டை விட அதிகமாகும். அதாவது கரோனா தொற்று புதிய தொற்றாக உருமாற்றம் அடையும்போது, கூடுதல் வேகத்தில் பரவுகிறது.
அப்படி இருக்கையில் ஒமைக்ரான் தொற்று பிஏ.2 என்று உருமாற்றமடைந்து (mutation) அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் முந்தைய வேரியண்டுகளைவிட அதிகமாக பரவும் தன்மைகொண்டது என்று வல்லூநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு உருமாற்றமடைந்த ஒமைக்ரான் 57 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், உருமாறிய பிஏ.2 தொற்று, ஒமைக்ரான் தொற்று போலவே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், அதை குறைத்து மதிப்பிடவில்லை. உருமாற்றம் அடையும்போது வைரஸ் வேகமெடுக்கிறது. தடுப்பூசியால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
இந்த தொற்று குறித்து குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. இதனிடையே 57 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக ஒமைக்ரானைவிட அதிவேகமாகப் பரவுகிறது. இந்த தொற்றின் வீரியம் குறித்து முழுமையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான், டெல்டா பரவல் பிப்ரவரியில் உச்சத்தைத் தொடுமா?