தகவல் தொழில்நுட்பம், பூமி குறித்த ஆய்வுகள் என பல்வேறு முக்கிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கும் செயற்கை கோள்கள்தான் முக்கியமானவை. அப்படிப்பட்ட செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் மூலம் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன.
மிகப்பெரிய எடை கொண்ட இந்த செயற்கை கோள்களை எடுத்துச் செல்ல ராக்கெட்டுகளுக்கு அதிக உந்துசக்தி தேவை. இந்த அளவு உந்துசக்தியை, குறிப்பிட்ட எரிபொருள் மூலம் மட்டுமே அடையமுடியும். ஆனால், இந்த வகை ராக்கெட் எரிபொருள் தானாக எரியாது. அதற்குத் தனியாக ஆக்ஸிடைசர்கள் தேவை.
இதன் காரணமாக காற்று மாசும் அதிகப்படியாக ஏற்படுகிறது. இந்த வகையிலான காற்று மாசை குறைக்க மாற்று வழிகள் குறித்து பல ஆராய்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், காற்றை மாசுபடுத்தாமல் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் முறையை விரைவில் பின்பற்ற உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி பயணங்களுக்கு தற்போது அதிக நச்சை வெளிப்படுத்தும் ஹைட்ராஸின் (hydrazine) பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நாசா கண்டுபிடித்துள்ள பசுமை உந்துவிசை உட்செலுத்துதல் மிஷன் (Green Propellant Infusion Mission) இந்த நிலையை மாற்றும். இது குறைந்த அளவே நச்சை வெளிப்படுத்தும். மேலும், ஒப்பீட்டளவில் குறைவான விலையில் இருப்பதாலும், நீண்ட நேரம் இயங்குவதாலும் வரும்காலங்களில் விண்வெளி பயணங்களுக்கு இந்த வகை எரிபொருள்களே அதிகம் பயன்படுத்தப்படும் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி விவகாரங்களின் நிலைப்பாடு - கமலா ஹாரிஸுக்கு ஆதரவும்...! எதிர்ப்பும்...!