அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை, சந்தேகத்தின்பேரில் விசாரித்த காவலர் ஒருவர், அவரைக் கீழே தள்ளி கழுத்தில் தனது காலை வைத்து பலமாக அழுத்தியதில் மூச்சுத் திணறிய ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் காணொலி உலகம் முழுவதும் பரவி பல்வேறு கண்டனங்களும், 'கருப்பினத்தர்கள் வாழ்க்கைப் போராட்டம்' என்ற பெயரில் உலகம் தழுவிய ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.
இதன் காரணமாக அமெரிக்காவின் பல பகுதிகளில் வன்முறைகளும் வெடித்தன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கருப்பினத்தவர்களின் கோரிக்கைகள் குறித்தும், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் குறித்தும் விசாரிக்க அவரது சகோதரரான பிளோனிஸ் ஃப்ளாய்டை அழைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினர், நிறவெறிக்கு எதிரான பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்தக் காணொலி கூட்டத்தில் பேசிய பிளோனிஸ் ஃபிளாய்ட், “எனது சகோதரனின் சார்பில் நான் இருக்கிறேன். உலகில் தாக்குதலுக்கு உள்ளாகும் அனைத்து சகோதர, சகோதரிகளின் சார்பாக ஐக்கிய நாடுகள் சபை துணை நிற்கும் என நம்புகிறேன்.
எனது சகோதரன் மரணத்திற்கு நீதி வேண்டுகிறேன். நான் அவனுக்காக உங்களிடம் உதவி கேட்கிறேன், நான் எனக்காகவும் உங்களிடம் உதவி கேட்கிறேன். தினமும் பாதிப்பிற்குள்ளாகும் கருப்பின மக்களுக்காகவும் உதவியைக் கேட்கிறேன்” என மிகுந்த வேதனையுடன் கூறினார்.
பின்னர், அமெரிக்காவில் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக ஐநா அமைப்பினர் தெரிவித்தனர். இந்த அமைப்பு கறுப்பின மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.