உலகிலேயே மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில், அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். இருப்பினும், தீவிர வலதுசாரி சிந்தனையாளரான ஜெய்ர் போல்சனரோ பிரேசில் அதிபராக பொறுப்பெற்றது முதல் அமேசான் அழிக்கப்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளது.
காடுகளை அழிக்க வைக்கப்படும் தீ, சில சமயங்களில் காட்டுத்தீயாக மாறி பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகளை அழித்துவருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 28 விழுக்காடு வரை அமேசானில் காட்டுத் தீ அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5,318 தீ விபத்துகள் மட்டுமே ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 6,803 தீ விபத்துகள் பதிவாகியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம்தான் அதிகளவில் தீ விபத்துகள் ஏற்படும், ஆனால், இந்தாண்டு ஜூலை மாதத்திலேயே தீ விபத்து அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கவலை தெரிவித்தனர்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரேசிலின் அமேசான் காடுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, காடுகள் அழிக்கப்படும் வேகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 30,900 தீ விபத்துகள் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீ விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அமேசான் காடுகளை எரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை பிரேசில் அரசு நான்கு மாதங்கள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதை ராணுவம் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஆப்பிள் தீ’ - அணைக்க போராடும் கலிபோர்னியா அலுவலர்கள்!