வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கரோனா பாதிப்பின் தாக்கம் அதிபர் ட்ரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவை அதிபர் ட்ரம்ப் முறையாக எதிர்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நோய்ப் பரவலின் தீவிரத்தை உணராது ட்ரம்ப் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இதுபெரும் விமர்சனத்திற்குள்ளாகிவரும் நிலையில், அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணர் அந்தோனி பௌசி ஓரங்கட்டப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டில் ஊரடங்கைத் தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அதிபர் ட்ரம்ப் தொடர் முயற்சிகளை செய்துவருகிறார். ஆனால், அங்கு பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதால், முழு தளர்வு வேண்டாம் என பௌசி தெரிவித்துவருகிறார்.
பௌசியின் இந்தக் கருத்தை விரும்பாத ட்ரம்ப் அரசு அவரை செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தாமல் ஓரங்கட்டிவருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... காரணம் என்ன?