உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். அதில், சுமார் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன.
இந்நிலையில், ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து, 3ஆம் கட்ட மருத்துவ சோதனையில் 90 விழுக்காடு சிறப்பாகச் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களுக்கு டம்மி தடுப்பு மருந்து வழங்கப்பட்டதா என்பது சோதனையின் இறுதியில்தான் தெரியவரும்" என்றார்.
எந்தவொரு தடுப்பு மருந்தும் குறைந்தபட்சம் 50 விழுக்காடாவது வலிமையுடன் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் எஃப்.டி.எ-இன் விதிமுறையாகும்.
மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதால், இந்தாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வருவது சந்தேகம்தான். அடுத்தாண்டு புழக்கத்திற்கு வந்தாலும், முதல் சில மாதங்கள் அதிக ஆபத்திலுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் கரோனா வைரஸால் 5,08,82,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து உற்பத்தியை தொடங்கிய ஆஸ்திரேலியா!