வாஷிங்டன் (அமெரிக்கா): கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.12) தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள கலிஃபோர்னியா இர்வின் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கிளிண்டன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டதை அடுத்து அவரது உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த மருத்துவக் குழுவுடனும், இதய நிபுணருடனும் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பில் கிளிண்டனின் பதவிக்காலம் கடந்த 2001ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து குன்றத் தொடங்கியது.
2004ஆம் ஆண்டு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் காரணமாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2005ஆம் ஆண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டு அவரது கரோனரி தமனியில் ஸ்டன்ட்கள் பொருத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வீகன் உணவுமுறைக்கு மாறிய பில் கிளிண்டன் தனது உடல் எடையைக் குறைத்து, உடல்நலனைப் பேணி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தைவானில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்