வடக்கு போட்ஸ்வானாவில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் யானைகள் வசித்துவருகின்றன. இப்பகுதி முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தாண்டின் தொடக்கத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட யானைகள் அடுத்தடுத்த உயிரிழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. யானைகளின் மரணத்தைக் கண்டறியும் ஆய்வும் நடைபெற்றுவந்தது.
போட்ஸ்வானாவில் உயிரிழந்த 330 யானைகளின் திடீர் மரணத்திற்கு, நச்சு நீல-பச்சை ஆல்கா கலந்த தண்ணீரை யானை குடித்ததுதான் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்களின் இயக்குநர் சிரில் தாவோலோ, "செரோங்கா பகுதியில் உள்ள யானைகள் நரம்பியல் கோளாறால் உயிரிழந்துள்ளன. இது பருவகாலத்தில் நீர் ஆதாரங்களில் உருவாகும் சயனோபாக்டீரியத்தின் நச்சு காரணமாக குடிநீர் அசுத்தமாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்தத் தண்ணீர் மொத்தமாக வடிந்தபிறகு சந்தேகத்திற்கிடமான யானைகள் மரணங்கள் நின்றதை தொடர்ந்தே கண்டறியப்பட்டது. ஆனால், இந்த நீரால் வேறு எந்த விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இறந்த யானையின் சடலங்களை சாப்பிட்ட ஹைனாக்கள், கழுகுகளுக்கும் எந்தவிதமான நோய் அறிகுறிகள் இல்லை" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "இந்த யானைகள் மரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை அரசால் நடத்தப்பட்டது. எல்லா வயதிலான ஆண், பெண் யானைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவ பரிசோதனையில் அனைத்து யானைகளும் சயனோபாக்டீரியா காரணமாக உருவான நீல-பச்சை ஆல்காவால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
இவை யானைகளுக்கு நரம்பியல் ரீதியான பாதிப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
சில சமயங்களில் மூச்சுத் திணறலும் ஏற்படலாம். ஆனால், இந்த நீரை குடித்த மற்ற விலங்குகளுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அறிவியல் ரீதியாகப் கண்டறியவில்லை. எவ்வாறாயினும், இதுபோன்ற எதிர்கால நிகழ்வுகளைக் கண்காணிக்க பருவகால நீர் ஆதாரங்களைக் கண்காணிக்க ஒரு திட்டம் உடனடியாக நிறுவப்படும்" எனத் தெரிவித்தார்