சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வராதவர்கள் மீது பள்ளிக் கல்வித் துறையில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ஜாக்டோ ஜியோ போராட்டம்
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30ஆம் தேதி வரை காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் அரசுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஜாக்டோ ஜியோ அமைப்பில் அதிகளவில் ஆசிரியர்கள் கலந்துகொண்டதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்க
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்துக் கட்சியினரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தியிருந்தனர்.
பணியாளர்-நிர்வாக சீர்திருத்தத் துறையின் உத்தரவு
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற முடியாமலும் - பணியிடமாறுதலில் கலந்துகொள்ள முடியாமலும் அவதிப்பட்டுவந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2019 ஜனவரி 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் எனவும், தண்டனை வழங்கியிருந்தால் அவற்றை ரத்து செய்தும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கியிருந்தால் அவற்றை ரத்துசெய்தும் உத்தரவு வழங்கிய விவரங்கள் பள்ளிக் கல்வித் துறையால் கேட்கப்பட்டது.
நடவடிக்கை ரத்து
ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே தமிழ்நாடு குடிமைப்பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகள் 17 (A) மற்றும் 17(B) இங்கே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் இருந்தால் அவற்றை ரத்துசெய்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பின் அதனை விலக்கிக்கொண்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டவர்களின் பணி நாள்களை வேலை நாள்களாகக் கருதி முறைப்படுத்த வேண்டும். இதனால் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.