சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் "அஜயந்தே ரண்டம் மோஷனம்". இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் "அஜயந்தே ரண்டம் மோஷனம்" படம் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை யுஜிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று(அக்.11) நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்