கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் N.S. கிருஷ்ணன். சிறு வயதில் நாடக கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக வேலை செய்து வந்த அவர், தனது சிறு வயதில் வறுமையால் வாடி, பல துன்பங்களை சந்தித்து வந்தார்.
பின்னர் வில்லுப்பாட்டு கலையைக்கற்று, நாடகங்களில் நடித்து, தனது கலைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்படியாக வளர்ந்த அவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை தொடங்கும் அளவிற்கு உயர்ந்தார். பின் கால சுழற்சிக்கு ஏற்ப, தமிழ் திரைப்படத்துறையில் கால்பதித்தார். 1936ஆம் ஆண்டு 'சதி லீலாவதி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதில் இருந்து தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் 48 பாடல்களுக்கும் மேல் சொந்தமாக பாடியும் நடித்து வந்துள்ளார்.
தன் நடிப்பின் மூலமாக அனைவரையும் சிரிக்கவைத்து சிந்திக்க செய்தவர். மேலும் நடிப்பில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. சமூக சீர்திருத்த கருத்துகளை அன்றைய காலத்திலேயே துணிச்சலோடு வெளிப்படுத்திய கலைவாணர் N.S. கிருஷ்ணன், நடிகை மதுரத்தை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்கையினை தொடர்ந்தார். தன் வருமானத்தின் பெரிய பகுதியை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி, கொடை வள்ளலாகத் திகழ்ந்த அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி தனது 49ஆவது வயதில் காலமானார்.
அவர் மறைந்தாலும் தமிழ்த்திரை உலகில் அவர் புகழ் என்றும் அழியாமல் இருக்கும் அளவிற்கு சிறந்த கலைஞர் ஆக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மணிமேடை சந்திப்பில் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்றைய சட்டப்பேரவை உறுப்பினரும் பிற்காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சருமாக இருந்த எம்.ஜி.ஆர், கலைவாணருக்கு சிலை அமைத்து திறந்து வைத்தார்.
நகைச்சுவையின் முடிசூடா மன்னனான கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களின் 65ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க:எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் ஓர் பாசமிகு பந்தம் என்றும் உண்டு... நடிகர் விக்ரம்