சென்னை: தோனி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த எல்ஜிஎம் (LGM) படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தோனி சாக்ஷி, நல்ல கதாப்பாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பது குறித்து தோனி நிச்சயம் ஆலோசனை செய்வார் என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் படத்தின் (LGM Movie) செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூலை 25) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, சாக்ஷி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, விநியோகஸ்தர் சக்திவேலன், ஆர்ஜே விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி சாக்ஷி, தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான உறவுக்கு மொழி ஒரு தடையில்லை என்றும்; இது ஒருவித எமோஷன் என்றும் கூறினார். இதனால் தான், முதலில் இங்கு தமிழில் படம் தயாரித்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கும் தோனிக்கும் இடையே மொழி ஒரு தடையாக இருந்ததில்லை என்றார்.
இந்த தோனி என்டர்டெய்ன்மென்ட் (Dhoni Entertainment) நிறுவனத்தை எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று நினைப்பதாகவும், இந்த நிறுவனத்தை தொடங்கியதும் தமிழ்நாட்டில் தான் என்றும் தோனி சாக்ஷி பேசினார். இந்த எல்ஜிஎம் படத்திற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், கண்டிப்பாக இத்திரைப்படம் எல்லோருக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்றும் பெருமிதம் கொண்டார்.
இதையும் படிங்க: "என் இளமைக்கு காரணம் என்ன தெரியுமா"? - நடிகை நதியா விளக்கம்
மேலும், தோனி சமீபத்தில் இப்படத்தை பார்த்தார் என்றும்; படம் நன்றாக வந்துள்ளதாகவும் கூறினார். ஒருவேளை தோனியை வைத்து படம் எடுத்தால் சண்டை காட்சிகள் நிறைந்த நல்ல ஒரு ஆக்ஷன் படத்தை தயாரிப்பேன் என தோனி சாக்ஷி நம்பிக்கை தெரிவித்தார்.
2006-லிருந்து தோனி பல விளம்பரங்களில் நடித்து வருவதால் தோனிக்கு கேமரா முன்பு எப்படி நடிக்க வேண்டும் எனத் தெரியும்; ஆகவே, நல்ல விஷயங்களை சொல்லும் நல்ல கதாப்பாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பது குறித்து தோனி நிச்சயம் ஆலோசனை செய்வார் என்றும் சினிமாவில் அவர் நடிக்க வேண்டும் என்பதே தனது யோசனையும் கூட என்றும் பேசியுள்ளார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை நதியா, தோனி (MS Dhoni) பெயர் இருந்தாலே போதும், விளம்பரங்கள் தேவையில்லை என்றும் இயக்குனர் மிக திறமையானவர் என்றார். மேலும், எல்ஜிஎம் படம் ஒரு அருமையான படம் என்றும் குடும்பத்துடன் சென்று படத்தை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
இவரைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், எனது படம் தியேட்டரில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், பலமுறை யோசித்து இதை நினைத்து பயந்துவிட்டதாகவும் தெரிவித்தார். முன்னணி நடிகர்களின் படங்களை ரசிகர்கள் தேடிச் சென்று பார்க்கும் போது, என்னைப் போன்ற வளரும் நடிகர்களின் படங்களுக்கு இதுபோன்று நடக்குமா? என்று தோன்றியதாக அவர் கூறினார்.
நானே விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் ஆனால் முதல் நாள் சென்று பார்ப்பதாக கூறிய ஹரிஷ் கல்யாண், தற்போது நல்ல படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தருவதாகவும், இது எங்களுக்கு ஒரு உந்துதல் கொடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதோடு, இப்படத்துக்கு ரசிகர்களது ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் பேசினார். இது குறித்து மேலும் பேசிய ஹரிஷ் கல்யாண், தோனி என்பவர் ஒரு நபரல்ல; அவர் தமிழர்களுடன் உணர்வுப்பூர்வமாக கலந்துவிட்டவர் என்றும்; இந்த பந்தத்தின் காரணமாகவே அவர் தமிழில் தனது முதல் படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குனருக்கும், தோனிக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்தார். வில் அம்பு படத்திற்குப் பின்பு நல்ல ஜாலியான ஒரு படத்தில் யோகி பாபுடன் இணைந்து நடித்துள்ளதாகவும், இப்படத்தில் அவர் நிறைய காமெடி செய்துள்ளதாகவும் புன்னகையுடன் ஹரிஷ் கல்யாண் பேசினார்.
இதையும் படிங்க: மாமா குட்டிகளை கிறங்கடிக்கும் நடிகை இவானாவின் லேட்டஸ்ட் பிக்சர்ஸ்!