தமிழ் சினிமாவில் தற்போது கதைப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது போல. பெரிய நடிகர்களின் படங்களே கதையே இல்லாமல் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமில்லாமல், ஒரே மாதிரி கதைக்களத்தை கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி, ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_756.jpeg)
கரோனா காலகட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் ஓடிடி தளங்களின் வசம் நகர்ந்துவிட்டதால் திரையரங்குகளுக்கான படங்களும் சற்று குறைந்துள்ளன. இதனால் என்ன செய்வது என்று தெரியாத இயக்குநர்கள் பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்யத் தொடங்கினர்.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_839.jpeg)
குறிப்பாக மலையாளம், தெலுங்கு, இந்திப் படங்களை அதிக அளவில் ரீமேக் செய்து வருகின்றனர். ஆனால், அப்படி ரீமேக் செய்யப்படும் படங்கள் எல்லாமே வெற்றிபெறுவது இல்லை. அந்த மொழியில் அவர்களது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்களை ரீமேக் செய்யும் போது நமது மண்ணிற்கு தகுந்தாற்போல் எடுக்க வேண்டும்.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_693.jpeg)
இதனை நமது இயக்குநர்கள் கோட்டைவிட்டு விடுகின்றனர். விளைவு படம் இங்கே தோல்வியைச் சந்திக்கிறது. ஆனால், சமீபகாலமாக ஒரே நடிகரின் படங்களை தமிழில் அதிக அளவில் ரீமேக் செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அவர் நடித்த படங்களே குறைவுதான். அவர்தான் இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துவரும் ஆயுஷ்மான் குரானா. இவரது படங்களைத்தான் தற்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் ரீமேக் செய்து வருகின்றனர்.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_358.jpg)
ஆயுஷ்மான் குரானா நம்மூர் சிவகார்த்திகேயன் போல இந்தியில். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப்பிறகு நடிகரானவர். பாலிவுட்டில் கான்கள் ஆதிக்கம் செலுத்தும் சமயத்தில் நுழைந்து தற்போது அவர்களுக்கே சிம்மசொப்பனமாகத் திகழ்பவர். அவரது நடிப்பில் வெளியான ’விக்கி டோனர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது வரை 10க்கும் மேற்பட்ட படங்களில்தான் நடித்திருப்பார். ஆனால், அவற்றில் 4 படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவிட்டன.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_820.jpeg)
விக்கி டோனர் - 2012இல் வெளியான இப்படம் ஆயுஷ்மான் குரானாவின் முதல்படம். முதல்படத்திலேயே விந்தணு தானம் செய்பவராக நடித்திருந்தார். படமும் மிகப்பெரிய ஹிட். இப்படத்தை தமிழில் 2020ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ஹரீஷ் கல்யாண், விவேக் ஆகியோர் நடித்த இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்தார்.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_428.jpeg)
தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ற கதையில்லை என்றாலும் கலகலப்பாக எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிபெற்றது. ஹரீஷ் கல்யாணுக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
2019ஆம் ஆண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ஆர்ட்டிகள் 15. மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது என்பதை இப்படம் பேசியது.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_867.jpeg)
இந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தனர். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
![தமிழ் சினிமாவில் கதை பஞ்சம்? - ஒரே நடிகரின் படங்களை ரீமேக்கும் இயக்குனர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-remake-movies-ayushman-script-spl-7205221_01062022133616_0106f_1654070776_238.jpeg)
‘அந்தாதூன்’ - ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் அந்தாதூன். ஒரு கொலை நடக்கிறது. அதனைப் பார்த்த நபர் சாட்சியாக முடியாது ஏன் என்றால் அவர் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இந்த கதையில் பார்வையற்றவராக ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார்.
சீரியஸ் கிரைம் படமாக இல்லாமல் பிளாக் காமெடி படமாக கொடுத்திருந்தார், இயக்குநர். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ஆயுஷ்மான் குரானாவுக்கு கிடைத்தது. இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என ரீமேக் செய்யப்படுகிறது. பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிக்க வரும் பிரசாந்திற்கு இப்படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பதாய் ஹோ’ - 2018இல் அமித் சர்மா இயக்கத்தில் வெளியான படம் பதாய் ஹோ. தனது காதலை வீட்டிற்குச் சொல்ல வரும் மகனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. அதாவது தனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மீண்டும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்ற செய்திதான்.
நாம் பேசவே தயங்கும் விஷயத்தை குடும்பங்கள் எல்லோரும் சேர்ந்து ரசிக்கும் வகையில், காமெடி படமாக நமக்கு அளித்திருந்தார் இயக்குநர் அமித் சர்மா. இதிலும் ஆயுஷ்மான் குரானாதான் ஹீரோ. இப்படத்தில் தனக்கு முக்கியத்துவம் குறைவுதான் என்றாலும் நல்ல படத்தில் தாமும் இருக்க வேண்டும் என்று இதில் நடித்திருந்தார்.
இப்படம் தமிழில் ’வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்ஜே.பாலாஜியுடன் இணைந்து சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 17ஆம் தேதி வெளியாகிறது.
இப்படி ஒரே நடிகரின் படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுஷ்மான் குரானா எந்த படம் நடித்தாலும் அதன் ரீமேக் உரிமையை பெற தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போட்டிபோடுவார்கள் என்பது உறுதி. தமிழில் நல்ல கதைகள் இல்லாமல் இல்லை.
ஆனால், இப்போது இருக்கும் போட்டி உலகத்தில் ஒருகதையை எழுதி அதனை திரைப்படமாக எடுக்க மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். அதுவே ரீமேக் படமாக இருந்தால் சுலபமாக வேலை முடிந்துவிடும். ஏற்கெனவே வெற்றிபெற்ற படம் என்பதால் தயாரிப்பாளருக்கும் லாபம்தான். இதுவே தற்போதைய தமிழ் சினிமாவின் நிலவரமாக உள்ளது.
இதையும் படிங்க: ’என் உயிரின் உயிரேவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ - ஹாரிஸ் ஜெயராஜ்