சென்னை: ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன் வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் 'ரெய்டு'.
இதுகுறித்து தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம்.
ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய உதவி இயக்குநர் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.
இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு நடிகர் விக்ரம் பிரபு மிகச்சரியாக பொருந்திப் போனார் என முடிவு செய்தோம்.
அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்" என்றார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா & அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சி.எஸ். சாம் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க:நெட்டிசன் கிண்டலுக்கு உள்ளான டாப் ஸ்டார் பிரசாந்த் படம்!