சென்னை: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்துள்ளார். இதன், முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த புதினத்தை எம்ஜிஆர் தொடங்கி, கமல் ஹாசன் வரை எடுக்க நினைத்து முடியாமல் போனது.
தற்போது மணி ரத்னம் முயற்சியால் அவரது கனவுத் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியில் துணை நின்றவர் லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன். இப்படத்தை மிகப் பிரமாண்டமான முதலீட்டில் தயாரித்தவர் அவர்தான். இந்த புதினத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்கடியான் நம்பி, நந்தினி, குந்தவை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா உள்ளிட்டோர் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முதல் பாகத்தில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இதனால் இரண்டாம் பாகத்தின் பாடல்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தியத்தேவன், குந்தவை காதல் பாடலான அக நக என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. மற்ற பாடல்களுக்கும் இதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக டிரைலர் விழா நடைபெற உள்ளது. இதனால் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 அடுத்த மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக படக்குழுவினர் விளம்பரப்படுத்தும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல் கார்த்தி மற்றும் த்ரிஷா தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கதாபாத்திரம் போன்று பேசி படத்துக்கான எதிர்பார்க்கப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் பாகத்தில் நந்தினியான ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் அமைதியாக காய் நகர்த்தும் இந்த பாகத்தில் அந்த கதாபாத்திரத்தின் முழு சுயரூபம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: SK 21 - காஷ்மீரில் லொகேஷன் தேடும் சிவகார்த்திகேயனின் படக்குழு!