சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவில் ஒருவராக உருவெடுத்ததை அடுத்து இவரை வைத்து படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் முன் வந்தனர். தற்போது தமிழ் சினிமாவின் பிரின்ஸ் ஆக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. ஆனாலும், இவருக்கு உண்டான மார்க்கெட் குறையவில்லை.
அதன் காரணமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்நிலையில் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, அடுத்து வெளிவர உள்ள திரைப்படம், மாவீரன். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 படத்தின் பூஜை!
இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அது மட்டுமில்லாமல் தேசிய விருதும் பெற்றது. இதனால் இருவரும் இணைந்துள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளதாக நேற்று படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதால் அடுத்த நாள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவீரன் படத்திற்குத் தியேட்டர்கள் குறைவாக கிடைக்கும் என்பதாலும், மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்துடன் வெளியாகக் கூடாது என்பதற்காக மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்குப் பதிலாக முன்னதாகவே ஜூலை 14ஆம் தேதி மாவீரன் வெளியாக உள்ளது என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் முன்னதாக நடித்த படங்கள் டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: PS 2: மணிரத்னம் இப்படி செய்தது வருத்தம் தான் - இயக்குநர் மோகன் ஜி!