சென்னை: இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவரது படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், சமூக நீதி பற்றியும் அதிகம் பேசும். இவர் இயக்கிய படங்களின் மூலம் பல எதிர் வினைகளைச் சந்தித்தாலும் தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.
அப்படி இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து, கடந்த மாதம் வெளியான படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு வித்தியாசமான வேடத்தில் நடித்துக் கலக்கியிருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையும், ஜிகு ஜிகு ரயில், நெஞ்சமே நெஞ்சமே உள்ளிட்ட பாடல்களும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு இப்படியும் நடிப்பாரா என்று வியந்தனர். ஃபகத் ஃபாசில் நடிப்பும் உதயநிதியின் நடிப்பும் இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
மாரி செல்வராஜ் பேசும் வழக்கமான அரசியல் தான் இப்படத்திலும் இருந்தது. பட்டியல் இன மக்களின் வலிகளை பேசி வந்த மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படத்தில் பொது வாழ்வில் பட்டியல் இன அரசியல்வாதி எப்படி ஆதிக்க சாதியினரால் நடத்தப்படுகிறார் என்று காட்டியிருந்தார். சமூக நீதி பேசிய இப்படம் திரையரங்குகளில் நல்ல வசூல் பெற்றதாக உதயநிதி தெரிவித்திருந்தார். 'மாமன்னன்' படத்தின் கதை முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தெலுங்கிலும் ‘நாயகுடு’ என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் இப்படம் வரவேற்பினைப் பெற்றது. அது மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவாகும். அமைச்சர் ஆன பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன்படி மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசிப் படமாக அமைந்துள்ளது. முன்னதாக அரசியல் வேலை காரணமாக, கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் நடிக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் இப்படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற இப்படம் ஓடிடியிலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: India Couture Week 2023: ராம்ப் வாக்கில் திகைக்க வைத்த அதிதி ராவ் - ஆடை அழகின் பின்னணி என்ன?