சென்னை: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாகும். ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ஜப்பான் படம் வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு கார்த்தி உடன் பணியாற்றிய அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கான அனுமதி முழுமையாக வாங்கப்பட்டது. கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்த காரணம் எனக்குத் தெரியவில்லை. அது அந்த படக்குழுவுக்குத் தான் தெரியும் என்றார்.
மேலும், கார்த்தியின் ரசிகர்கள் 7,000 பேர் வரை விழாவுக்கு வர உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள கார்த்தி ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. தீபாவளி அன்று படம் வெளியாகிறது என்றால் சிறப்புக் காட்சிக்குக் கோரிக்கை வைக்கலாம். 2 நாள் முன்னதாகவே வெளியாவதால், காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்றார்.
ஜப்பான் சமூக படம் கிடையாது, நகைச்சுவையான படம். உலகம் முழுவதும் 1,500 முதல் 2,000 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். மேலும், குடும்பத்துடன் வந்து பார்க்கும் விதமாக ஜப்பான் படம் இருக்கும். ராஜு முருகன் படம் என்பதால் சமூக கருத்து இருக்கும். முகம் சுளிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இல்லை. தீபாவளிக்கு வெளியாகும் படம் என்பதால் கொண்டாட்டமாகவே உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், சமூகப் பொறுப்புடன் கவனமாகச் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. லியோ படத்தில் பேசிய ஆபாச வார்த்தை படைப்பாளியின் சுதந்திரமாகப் பார்க்கிறேன். அந்த கதாபாத்திரம் பேசும் வார்த்தையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சித்தா, டாடா படங்கள் எந்த அளவிற்கு வசூல் கொடுத்ததோ அதற்கு இணையான வசூல் இறுகப்பற்று திரைப்படம் கொடுத்துள்ளது. விஷால் சென்சார் சர்ச்சை பெரிய அளவில் பயனாக அமையும். சென்சார் குழுவுக்கு நன்றி. பணிச்சுமை, காலநேரத்தைக் குறைக்கப் பயனுள்ளதாக அமையும் என்றார். திரையரங்கு கட்டணம் குறித்து அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்போம். Satellite, OTT வந்ததற்குப் பின் 4,000 என இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 850 ஆகக் குறைந்துள்ளது. பல திரையரங்குகள் திருமண மண்டபமாக மாறி வருகிறது.
இந்த தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதன் வருவாயை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகள் மூடப்பட்டு வருவதற்குப் படங்கள் மட்டும் காரணமாகிவிட முடியாது. மக்களின் ரசனையும் மாறி இருப்பதாகச் சொல்லலாம். குடும்பங்களுக்கு தியேட்டருக்கு போகாமல் வீட்டிலேயே படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையும் உருவாகி இருக்கிறது. நல்ல படங்கள் வந்ததாகக் கூறும் காலகட்டத்தில் 75, 80 படங்கள் வந்தன. ஆனால் அப்போது வந்ததற்கும் இப்போது வருவதற்கும் ஹிட் படங்கள் எண்ணிக்கை ஒன்று தான்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யோகி பாபு மகளின் பிறந்தநாளுக்கு முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கிய விஷால்!