சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் காத்திரமான படைப்புகளை வழங்கி வருபவர். இவரது படங்கள் அனைத்தும் கமர்ஷியல் கடந்து மக்களிடையே பெரிதும் ரசிக்கப்படுபவை. இவர், இயக்கிய அனைத்துப் படங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, வெற்றிப்படங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், இவரது இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், வெற்றிமாறனோ நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரியை, கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கினார்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பவானி ஸ்ரீ, இயக்குநர் ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் கதை ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு, பாடலும் இணையாக ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படம் ஜெயமோகனின் துணைவன் என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்ட நிலையில், முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாச்சாத்தி உள்ளிட்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வெற்றி மாறன் கையாண்டு இருந்த உண்மைக்கு நெருக்கமான காட்சிகள், பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களை காவல்துறை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி உள்ளனர் என்பதையும் இப்படத்தின் காட்சிகள் வழியாக நாம் பார்க்க முடிந்தது.
ஒரு ஊரின் நன்மைக்காகப் போராடும் குழுவினரை எப்படி அரசும் காவல் துறையும் கையாள்கிறது என்பதும் இப்படத்தின் வாயிலாகச் சொல்லப்பட்டது. திரையுலகில் நகைச்சுவை நாயகனாக மட்டுமே வலம் வந்த சூரி, இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி குறைந்த நேரமே வந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார். சூரி தனது வாழ்நாளில் சிறந்த காலகட்டத்தில் இருக்கிறார்.
ஏனெனில், கதாநாயகனாக முதல் முறை களம் இறங்கிய சூரியின் நடிப்பு ரசிகர்களை கண்கலங்க வைத்தது. மேலும், முதல் பாகத்தில் சூரியின் கதாப்பாத்திரம் மற்றும் பவானி இருவருக்குமான காதல் காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன. இப்படம், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு பெற்று ஓடிடியில் வெளியாகி அங்கேயும் நல்ல பாராட்டுகளைப் பெற்றது.
படம் வெளியாகி இன்றுடன் (மே 19) 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வார்த்தையே மகிழ்ச்சியாக உள்ளது - கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு!