சென்னை: தமிழ் சினிமாவில் தனது காத்திரமான படைப்புகளின் மூலம் தனியிடம் பிடித்தவர், இயக்குநர் வெற்றிமாறன். பெரும்பாலும் நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படமாக எடுப்பவர். சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து மக்களுக்கு ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வரும் படைப்பாளி, வெற்றிமாறன்.
இவரது விசாரணை, அசுரன் போன்ற திரைப்படங்கள் லாக்கப், வெக்கை போன்ற நாவல்களில் இருந்து எடுத்தாளப்பட்டவை தான். புத்தகமாக உள்ளதை அதற்கு தகுந்த திரைக்கதை மூலம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான திரை அனுபவத்தைக் கொடுத்து வருபவர். அதில் வணிக ரீதியாகவும் வெற்றி பெறுபவர். தற்போது இவரது இயக்கத்தில் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "விடுதலை" (viduthalai).
ஜெயமோகன் எழுதிய "துணைவன்" என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் விடுதலை இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நடிகர் சூரி கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆர்எஸ் இன்போடைன்மென்ட் மூலம் எல்ரெட் குமார் ''விடுதலை'' படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கம் போல் வெற்றிமாறனின் திரைக்கதை இதிலும் சிறப்பாக உள்ளதாகவும் சூரியின் நடிப்பு அருமையாக உள்ளதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி படத்தின் முக்கிய தூணாக இருப்பதாகவும், இந்தப் பாகத்தில் அவரது பணி குறைவு தான் என்றாலும் அடுத்த பாகத்தில் அவரது கதாபாத்திரம் அதிகமாக இருக்கும். ஒரு காவலருக்கும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த தலைவருக்குமான உரையாடல் தான் படத்தின் மையக்கரு.
மேலும், இதில் காவல்துறையினரின் அடக்குமுறை, பழங்குடி பெண்களுக்கு எதிரான அத்துமீறல் என கதை சொல்லியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். 1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி என்ற ஊரில் நடந்த அடக்கு முறை சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் எடுத்து, பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். இளையராஜாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் இப்படத்துக்கு மிகப்பெரிய பக்கபலம் என்றே கூறலாம்.
இந்த படத்துக்கும் வெற்றி மாறன் நிச்சயம் விருது வாங்குவார் என்றும்; சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த முதல் பாகத்தில் காவலரான சூரியின் அறிமுகமும், பழங்குடி பெண்ணான பவானி ஸ்ரீ மீது சூரிக்கு இருக்கும் காதலும், நக்சல் தலைவனை பிடிக்க காவல்துறை நடத்தும் அத்துமீறல்களும் சொல்லப்படுகின்றன.
இறுதியில் விஜய் சேதுபதியை காவலரான சூரி கைது செய்து, உயரதிகாரியிடம் ஒப்படைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை இரண்டாவது பாகத்தில் சொல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகுமெனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: கொசு விரட்டியால் நேர்ந்த சோகம் - கார்பன் மோனாக்சைடு நச்சை சுவாசித்த 6 பேர் பலி!