சென்னை: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர் பாக்யராஜ் நடித்து இயக்கிய 'தாவணி கனவுகள்' படத்தின் மூலம் 1984-ல் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மயில்சாமிக்கு கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பின், தூள், கில்லி உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துவிட்ட மயில்சாமி எம்ஜிஆரின் தீவிர வெறியர். இதுமட்டுமல்லாது, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக, தொகுப்பாளராக அசத்தியுள்ளார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மயில்சாமி, கரோனா காலத்தில் துணை நடிகர்கள் பலருக்கும் உதவி செய்தவர். சினிமாவில் சாதிக்கத்துடித்த பலருக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னாலான பல உதவிகளை செய்து கொண்டு இருந்தவர்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வரும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மயில்சாமி உயிரிழந்தார். மயில்சாமியின் மறைவு செய்தி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது, அவரது நடிப்பை ரசித்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.