தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி தொகுதி மக்களவை வேட்பாளர் வைத்தியநாதனை ஆதரித்து உப்பளம் பகுதியில் முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் பரப்புரையின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசுகையில், பாஜக ஆட்சியில இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. அதேபோன்று கட்டுக்கடங்காத முறையில் தலித் சமுதாயத்தினர் கடுமையாக தாக்கப்படுகின்றனர். சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடியை கூண்டோடு விரட்டியடிப்போம். இதுவரை புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்காமல், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார்.
மத்தியில் ராகுல் பிரதமர் ஆனால் புதுச்சேரி வளர்ச்சிக்கு கேட்கும் நிதியை வழங்குவார். பாஜகவை கூண்டோடு விரட்ட வேண்டும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியும் விரைவில் விரட்டப்படுவார் என்றும் அவர் கூறினார்.