சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி கண்டறியும் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 30) நடைபெற்றது.
முதலமைச்சரை வரவேற்பதற்காக ஓமாந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்து. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீரென சரிந்து விழுந்ததில் அந்தப் பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
புகார் ஏதும் இல்லை: உடனே மருத்துவர்கள் காயம்பட்ட பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கோகிலா (34) என்பதும், இவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்த்துக்கொண்டு வருவதும், கடைக்குச் சென்ற போது பேனர் மேலே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோகிலா காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனக்கு பேனர் வைக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும், அதனையும் மீறி, அவரது வார்த்தையைப் பொருட்படுத்தாமல் திமுகவினரால் பேனர்கள் வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.